கருணாநிதி 90 - ப.திருமாவேலன் #Throwback
திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக் குளத்தின் கரையில் இரண்டு சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 'வா... நீந்தி அந்தக் கரைக்குப் போவோம்’ என்று ஒருவன் அழைத்தான். இருவருமே குதித்து நீந்தினார்கள். பாதி தூரம் கடந்ததும் இன்னொருவன் சொன்னான், 'என்னால் முடியாது. வா... திரும்பிவிடலாம்’ என்று. 'திரும் பிப் போகும் பாதித் தூரத்தை முன்னோக்கிப்போனால், அந்தக் கரையைத் தொட்டு வெற்றிஅடையலாம்’ என்றான் அந்தச் சிறுவன்!
கட்சி ஆரம்பித்து சென்னையில் முதல் மாநில மாநாடு. எல்லோரும் மாநாட்டுத் தலைவரை அவரவர் மொழியில் வழிமொழிந்தார்கள். அந்த இளைஞர் கரகர குரலில், 'வாழ்வு மூன்றெழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து...’ என்றபோது மாநாடு குலுங்கியது!
இந்திரா என்ற பிம்பமே இந்தியாவை அச்சுறுத் திக்கொண்டிருந்த நேரம் அது. 'எமர்ஜென்சியா?’ என்று யோசிக்கவே பலரும் பயந்து நடுங்கிய நேரத்தில், 'இது சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழா’ என்று ஒரு பேனா தீர்மானம் தீட்டியது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை’ என்று செங்கோட்டை யைச் சீண்டினான் அந்தத் தலைவன்.
முழுத் தெப்பக் குளத்தையும் கடந்த அந்தச் சிறுவன்...
கரகரப்பான தொண்டைக்காரனான அந்த இளைஞன்...
இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த அந்தத் தலைவன்...
- இந்த வாரத்தில் 90-வது பிறந்த நாள் கொண்டாடும் கலைஞர் கருணாநிதி!
'90 வயது வரை வாழ்வோமா?’ என்ற சந்தேகம் 62 வயதில் கருணாநிதிக்கு வந்தது. 'மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அதிசயமான செய்திகளில் ஒன்று. 90 ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்கள் மிகச் சிலர்தான்’ என்று ஏக்கத்தோடு அன்று எழுதினார் கருணாநிதி. ஏக்கம் துடைத்து 90-ஐ எட்டியும்விட்டார். தனக்குப் பிடித்த பழமொழி என்று அடிக்கடி அவர் ஒன்றைச் சுட்டிக்காட்டுவார். 'நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக உயரம் தாண்ட முடியும்!’
கருணாநிதி அளவுக்கு உயரம் தாண்டியவர்கள், தமிழக அரசியலில் இதுவரை எவரும் இல்லை. ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வர், தொடர்ச்சியாக 11 முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர், 38 வயதில் தி.மு.க. பொருளாளர், 44 ஆண்டுகளாகத் தி.மு.க-வின் தலைவர் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். 32 வயதில் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆன ஒருவர் 90 வயதிலும் அதனைத் தக்கவைத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் அதிசயம். 1957-ல் அவரோடு சட்டசபைக்குள் போனவர்களில் இவர் மட்டுமே இன்னும் சபையை அலங்கரிக்கிறார்.
பலருக்குப் பதவிகள், பண்ணையார்கள் என்பதால் கிடைத்தன. முன்னோர்கள் தகுதியில் தொடர்ந் தன. ஆனால், திருவாரூருக்குப் பக்கத்தில் திருக்கோளிலி (பின்னர்தான் இது திருக்குவளை என அழைக்கப்பட்டது) என்ற கிராமத்தில் பிறந்த நாட்டு வைத்தியரின் மகனைச் சுற்றி 60 ஆண்டு தமிழ்நாட்டு அரசியல் சுழலக் காரணம், நேரங்காலம் பார்க்காத உழைப்பு. 'எதையும் தாங்கும் இதயம் இங்கு உறங்குகிறது’ என்று அண்ணாவின் கல்லறையில் எழுதிய கருணாநிதி, 'ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான் என்று எனது கல்லறையில் எழுதுங்கள்’ என்று எப்போதோ உத்தரவு போட்டுவிட்டார்.
12 வயதில் 'மாணவநேசன்’ என்ற கையெழுத் துப் பத்திரிகையை நடத்தினார். 90 வயதிலும் 'முரசொலி’யைத் திருத்திக்கொண்டு இருக்கிறார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத் தலைவர். இப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர். 'பீக்’ அரசியல் செய்த பெரும்பாலான தலைவர்கள் ஒரு காலகட்டத்தில் தொய்வடைந்து, கடைசியில் அமைதியானது உண்டு. ஆனால், கருணாநிதியால் அது முடியாது. ஏனென்றால், ரத்த ஓட்டம் மொத்தமும் அரசியலாக ஓடிக் கொண்டிருக்கிறது!
கடந்த வாரம் தி.மு.க. சொற்பொழிவாளர் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. பேச்சாளர்கள் தங்களது வருத்தங்களைச் சொன்னார்கள். கூட்டத்தினர் மட்டுமல்ல... மேடையில் இருந்தவர்களும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். அதிரடி அல்தாப் என்ற பேச்சாளர், கோவை மாவட்ட தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டி அரசியலைக் கொந்தளிப்புடன் கொட்ட ஆரம்பித்ததும் மேடையில் இருந்த ஸ்டாலின், 'இதையெல்லாம் இங்கே பேச வேண்டாம்’ என்று தடுத்துள்ளார். 'இந்த இடத்தில் பேசலாமா கூடாதா என்பதைவிட, இப்படி எல்லாம் இருந்தால் கட்சி உருப்படுமா?’ என்ற யோசனையில் கருணாநிதி மூழ்கினார். மைக் தனக்கு முன் வைக்கப்பட்டதும் அந்த ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார். 'அணி அணியாகக் கட்சி பிரிந்துகிடப்பது கழகத்தின் பிணி. இத்தகைய பிணியோடு கட்சி இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல்’ என்று முழங்கினார். அடக்கப்பட்டுக்கிடந்த ஆத்திரத்தை, எப்படிஎல்லாமோ வளர்த்த கட்சி இப்போது இப்படி இருக்கிறதே என்ற ஆதங் கத்தை அவர் வெளிப்படுத்திய விதம் அவருக்கு மட்டுமே உரித்தானது. இன்னும் 100 ஆண்டுகள் கழிந்த பின்னாலும் கழகத்தவருக்கு அச்சடித்துத் தர வேண்டிய அரிச்சுவடி அந்தப் பேச்சு.
கருணாநிதி அசைக்க முடியாத சக்தியாக இப்போது இருக்கும்போதுதான் இப்படிப் பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம். கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டு கழித்து (1950) நடந்த நெல்லை மாவட்ட முதல் மாவட்ட மாநாட்டிலேயே அப்படித்தான் பேசினார். 'ஏதோ குறை சொல்லப்போகிறேன் என்று கருத வேண்டாம். இந்த ஓராண்டில் நாம் செய்யாமல்விட்ட பணி கள் ஏராளம் உண்டு. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் அதன் முத்துக்களாகவும் கோக்கப்படவில்லை’ என்று மேடையில் அண்ணாவை வைத்துக்கொண்டே கருணாநிதி சொன்னபோது, அவருக்கு வயது 26. இதையெல்லாம் இங்கு பேச வேண்டாம் என்று இப்போது ஸ்டாலின் தடுத்ததைப் போல, அன்று ஈ.வெ.கி.சம்பத் தடுத்தார். கருணாநிதிக்கு சம்பத் பதில் சொன்னார். அந்தப் பதிலுக்கு விளக்கம் அளித்தார் கருணாநிதி. இருவரது பேச்சையும் 'திராவிட நாடு’ இதழில் வெளியிட வேண்டாம் என்றார் அண்ணா. இப்படிப்பட்ட எதிர்ப்பையே பார்த்துப் பார்த்துப் பழகியதால்தான் இதுவரை யிலும் அவரால் அரசியல் நடத்த முடிகிறது. 'வாழ்க்கையே போராட்டம் என வர்ணிப்போர் உண்டு. எனக்குப் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது’ என்று கருணாநிதி சொல்வதற்குக் காரணம், அந்தத் தலைமைப் பதவி அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. இத்தனை ஆண்டுகாலம் அதனைத் தக்கவைத்துக்கொள் வதும் அத்தனை சாதாரண விஷயம் அல்ல!
கருணாநிதி இந்தக் கட்சிக்குத் தலைவர்ஆகும்போது 46 வயது. அவரைவிட சீனியர்கள், சூப்பர் சீனியர்கள் கழகத்தில் குவிந்துகிடந்தார்கள். சமீப வருடங்களில் ஒரு வீரபாண்டி ஆறுமுகத்தி டம் கருணாநிதிபட்ட கஷ்டத்தைப் பார்த்தோம். ஆனால், அன்று 100 வீரபாண்டி ஆறுமுகங்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். அனைவரையும் அரவணைத்துத் தன்னை நிலைநிறுத்திக்கொள் வதுதான் ஜனநாயக அரசியல் காலகட்டத்தில் கவனிக்கத்தக்கது என்றால், இந்திய அரசியல் தலைவர்களிலேயே முதல் பரிசுக்குத் தகுதியான வர் கருணாநிதி மட்டும்தான்.
பேராசிரியர் அன்பழகன் என்ற ஓர் உதாரணம் போதும். 'கருணாநிதியைத் தளபதியாக வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேனே தவிர, தலைவராக ஏற்க மாட்டேன்’ என்று கடற்கரைக் கூட்டத்தில் வங்காள விரிகுடாவைச் சாட்சியாக வைத்துக்கொண்டு கர்ஜித்தவர் அவர். 'கலைஞரை நான் ஏன் தலைவராக ஏற்றுக்கொண்டேன் தெரியுமா?’ என்று இன்று ஒவ்வொரு கூட்டத்திலும் அன்பழகன் விளக்கம் அளிக்க வேண்டிய அளவுக்கு கருணாநிதியின் பிம்பம் பிறகு உயர்ந்தது. 'அண்ணா இருந்த இடத்தில் கருணாநிதி எல்லாம் தலைவரா?’ என்று கேட்டவர்களை எல்லாம், 'நல்லவேளை... கருணாநிதி தலைவர்ஆனார். அவர் இல்லாமல்போனால் கட்சியே இருந்திருக் காது’ என்று சீனியர்கள் பலரையும் இறுதிக் காலத்தில் சொல்லவைத்தவர் கருணாநிதி.
'கருணாநிதியைத் தலைவராகத் தேர்ந்தெடுப் பதன் மூலம் ஒரு பலசாலிக்குப் பின்னால் தனது பேதங்களை விட்டொழித்து தி.மு.க. ஒன்று சேர்ந்திருக்கிறது’ என்று 1969-ல் 'ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை எழுதியது. தன்னைத் தேர்ந்தெடுத்ததற்குப் பரிகாரமாக 45 ஆண்டுகள் இந்தக் கட்சி யைக் காப்பாற்றிக் கொண்டுவந்து பலசாலி மட்டும் அல்ல, பெரும்பலசாலி என்பதை நிரூபித்துவிட்டார் கருணாநிதி. மனவலிமை இருந்தால் எந்த எதிர்ப்பு மலையையும் உடைக்கலாம் என்பதற்கு உதாரணமாகவும் மாறிவிட்டார். கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம் இது.
அதே சமயம், எல்லா மனிதருக்கும் இன்னொரு பக்கம் உண்டு. அது கருணாநிதிக்கும் உண்டு. தன் மனதுக்குப் பட்டதை யாருக்கும் விட்டுத்தராமல், யார் என்ன விமர்சித்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுய சிந்தனையாளராக வலம் வந்த கருணாநிதியின் வளர்ச்சிக்கான தடைக் கற்கள் அவரது குடும்பத்துக்குள் இருந்தே வந்தன. 'வாரிசுகள் வரட்டுமே... இதில் என்ன தப்பு?’ என்று ஆரம்பத்தில் வழி அமைத்துக்கொடுத்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட சக்திகள் கிளம்பி, அண்ணா அறிவாலயத்துக்கே ஐந்து வாசல்களைத் திறக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை கருணாநிதி உணர்வதற்குள், அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. தஞ்சை மாவட்டத் தில் மன்னை நாராயணசாமி, எல்.கணேசன், கோ.சி.மணி - என்று மூன்று கோஷ்டிகளையும் ஒரே இடத்தில் உட்கார்த்திவைத்துச் சமாதானம் பேசிய துணிச்சல் மிகுந்த கருணாநிதிக்கு, கோபாலபுரத்துக்குள் அந்தத் துணிச்சல் கைகொடுக்க வில்லை. அங்குதான் அந்த பலசாலியின் கோட்டையில் ஓட்டை விழுந்தது!
இது சொந்தக் கட்சியில் மட்டுமல்ல... அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு வளர்ந்தது.
ஈழத்தில் இறுதிப் போர் நடந்த 2009 பிப்ரவரி 3-ம் நாள், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து தாடி முளைத்த நிலையில் தள்ளுவண்டியில், ராஜினாமா முடிவோடு வந்த கருணாநிதியைத் தடுத்ததும் அந்தக் குடும்பத் தடைக் கற்கள்தான். இத்தனை ஆண்டுகாலம் அவர் எழுப்பிவைத்திருந்த 'தமிழனத் தலைவர்’ என்ற பிம்பத்துக்குப் பங்கம் ஏற்படுத் தியது குடும்பக் காரணிகள்தான். அப்போது எல்லாம் கருணாநிதியால் எதுவும் செய்ய முடிய வில்லை, பழிகளைச் சுமப்பதைத் தவிர!
அந்த மன உளைச்சல்களைக் களைவதற்காக மாலை வேளைகளில் தன்னைத் துதி பாடும் பாராட்டு மேடைகளில் தேடித் தேடி இடம் பிடித்தார் கருணாநிதி. சில மணி நேரப் பாராட்டு விழாக்கள் பல பழிச் சொல்லுக்குத்தான் அவரை ஆளாக்கின.
காங்கிரஸ் திரைச்சீலை அதிகப்படியாகச் சாயம் போன பிறகு, கருணாநிதி அவராகவே கழற்றிப் போட முடிவெடுத்த நேரத்தில், கைத் தட்டத்தான் யாரும் இல்லை. மொத்த அடி யையும் வாங்கிக்கொண்டு பலவீனமான நிலை யில் குத்தும்போது, காங்கிரஸுக்கே வலிக்க வில்லை. அரசியல் அரங்கில் உரிய நேரத்தில் எடுக்கப்படாத எந்த முடிவும் வீரியம் இழந்து போகும் என்ற எதிர்மறைப் பாடத்தை மிகத் தாமதமாகக் கருணாநிதி உணர்ந்த காலகட்டம் அது.
இத்தகைய ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், கருணாநிதி இப்போதும், தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி!
மத்தியில் ஆட்சிக் கூட்டணியில் இல்லை. மாநிலத்தில் ஆட்சியிலும் இல்லை, எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்திலும் இல்லை. வரப் போகும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரே ஓர் இடம் பெறும் வலிமையில்கூட இல்லை. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி யோடு யார் கூட்டு சேருவார்கள் என்றும் தெரியவில்லை. ஆனாலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த வாரம் தனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளுக்குப் பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது உரை முழுவதையுமே கருணாநிதிக்கு விளக்கம் சொல்வதற்கே செலவு செய்தார்.
சட்டசபைக்கே செல்லாவிட்டாலும் அதன் இயக்கங்களைத் தீர்மானிப்பதில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் அளவுக்கு கருணாநிதியின் நிழலாட்சி என்றும் நிலைத்திருக்கும்!

Comments