குணா (சிறுக்கதை)- பிரபு காளிதாஸ்
பிரபு காளிதாஸ் முதல் சிறுக்கதை குங்குமம் இந்த வார இதழ் வெளிவந்தது.
“அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே.
ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை.
நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கையை தினம் செய்துவிட்டுத்தான் கிளம்புவாள். ஆற்றிலிருந்து இருபது குடம் தண்ணீர் தூக்கி வந்து தொட்டியை நிரப்ப வேண்டும். அம்மா வீட்டு வேலை பார்க்கக் கிளம்பி விடுவாள். இருபது குடங்களில் ஐந்தாவது குடம் தூக்கித் தொட்டியை நிரப்புவதற்குள் பொறுக்கிகளில் எவனாவது ஒருவன் வந்து அழைப்பு விடுத்து விடுவான்.
குணா கச்சலாய் இருப்பான். நடக்கும்போது பாதங்கள் இரண்டையும் பரப்பிக்கொண்டே நடப்பான். அவனால் வேகமாக நடக்கவோ ஓடவோ முடியாது. மீறி ஓடினால் பெரிய சைஸ் தவளை ஓடுவது போல் இருக்கும். எனவே அவனை ‘தவக்களை’ என்று கிண்டலடித்து, எந்த விளையாட்டுக்கும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
மெல்ல மெல்ல அவன் புறக்கணிப்பிற்குப் பழகிப் போயிருந்தான். தூக்கம் வராத இரவுகளில் ஆற்றங்கரை மண்டபத்தில் அமர்ந்திருப்பான். சில நாட்கள் அப்படியே கண்ணயர்வதும் உண்டு. அதிகாலை மணியோசை தூரத்தில் ஒலிக்க ஆரம்பித்து நிதானமாய் அவன் அருகில் நெருங்கும்போது எழுந்து அமர்ந்துகொள்வான்.
பிரம்மாண்டமான கோயில் யானை ஐந்தைந்து படிகளாகத் தாண்டி ஆற்றில் இறங்கி பாதி மூழ்கும் தூரம்வரை போய் நிற்கும். தண்ணீரை தும்பிக்கையால் அள்ளிப் பீய்த்து அடித்துச் சுழற்றி விளையாடும். அரைமணிநேரம் குளிக்கும். யானையின் காதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே அதன் உடலை பாகன் தேய்த்து விடுவார். அது குளித்தபின் அதன் நெற்றியில் பெரிய பட்டை வரைந்து அலங்கரிப்பார்.
புருவத்தைச் சுற்றி வண்ணப் புள்ளிகள் வெள்ளையும் சிகப்புமாய் வைப்பார். யானை தன் காதுகளையும் வாலையும் ஆட்டிக்கொண்டு ஒரு பெரிய குழந்தையைப் போல் ஒத்துழைப்பு கொடுக்கும். நாள் தவறாமல் இப்படித்தான் நடக்கும். ஆற்றங்கரையை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது.
அதன் அருகே இருந்த பாழடைந்த மண்டபத்தின் உள்ளே தினமும் சீட்டுக் கச்சேரி நடக்கும். மூக்கைய்யன் என்பவன் போலீஸுக்கு முறையாக மாமூல் கொடுத்து விஷயங்களை முறையாக இயங்கச் செய்துகொண்டிருந்தான். இவனுக்கு இரண்டு மனைவிகள். பக்திமான். கோயிலுக்கு தினமும், இரண்டு மனைவிகளில் யாரேனும் ஒருவருடன் சென்று வருவான்.
உள்ளே பூசாரி திருநீறு கொடுத்தால் தலைகுனிந்து அதை வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு மூலவரை நோக்கி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி அரைமணிநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பான். வெளியே வந்து யானைக்குக் காசு, அரிசி, வெல்லம் எல்லாம் கொடுத்து அங்கும் தலைகுனிந்து நிற்பான். யானை புஸ்சென்று அவன் தலைமேல் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்யும்.
மூக்கைய்யனுக்கு நிலபுலங்களுக்குக் குறைவே இல்லை. ஊருக்கு வெளியே தஞ்சாவூர் - திருச்சி இணையும் நெடுஞ்சாலை ஓரமாக ஒரு மது விடுதி நடத்திக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு சிகப்பு நிற புல்லட் இருந்தது. யானை வரும்முன் எப்படி மணியோசை கேட்குமோ அதே மாதிரி மூக்கைய்யன் வருவதற்கு முன் புல்லட் சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும்.
இந்த மூக்கையனிடம்தான் ஒருநாள் குணா தலைகுனித்து வணங்கி வேலை கேட்டான். யோசித்த மூக்கையன் ‘மதுவிடுதியில் சப்ளையர் வேலை செய்கிறாயா’ என்று கேட்டான். தன் அப்பா குடியால்தான் இறந்தார் என்றும், திரும்ப தானும் மது சம்பந்தப்பட்ட வேலைக்குப் போனால் அம்மா விடமாட்டாள் என்றும் குணா பதிலளித்தான்.
உடனே அவன் பின்னந்தலையில் அலட்சியமாய் ஒரு தட்டு தட்டினான் மூக்கைய்யன். “பார்ல வேல பாத்தா குடிப்பான்னு யாருடா சொன்னது? ஏன்டா இப்டி சாவடிக்கறீங்க? நானும்தான் பத்து வருஷமா பார் நடத்தறேன். ஒருநாள் குடிச்சிருப்பேனா..? வந்துட்டான் பேச...” “இல்லண்ணே, நீங்க சொல்றது புரியுது. ஆனா வேற வேலை ஏதாவது குடுங்கண்ணே...”
“சரி, அரச மரத்தடி சீட்டு கிளப் பாத்துக்கறியா..? எடுபிடி வேலை!” “சரிண்ணே. செய்யிறேன். அப்டியே வேற நல்ல வேலை ஏதாவது இருந்தா...” என்று முடிப்பதற்குள் கன்னத்தில் பொளேரென்று அறை விழுந்தது. “ஆறாவது கூட பாஸாவாத நாயி, ஒனக்கென்ன கலெக்டர் உத்தியோகமா தரமுடியும்..? சொன்ன வேலையைச் செய்..!”
குணா வேலை பார்க்க ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. தினமும் எல்லோருக்கும் சிகரெட், டீ, கள்ளச் சாராயம் எல்லாம் வாங்கி வரவேண்டும். கிடைக்கும் காசைக் கொண்டுபோய் வீட்டில் கொடுத்தும் அம்மாவிடம் வசவு. நண்பர்களின் புறக்கணிப்பு. ஒருநாள் அதிகாலை ஆற்றங்கரையில் அவன் அமர்ந்திருந்தபோது, யானை வந்து இறங்கியது. பாகன் குணாவை அழைத்தார்.
அவனைப் பற்றி விசாரித்தார். சகலத்தையும் சொன்னான். தான், இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா புறப்படுவதாகவும், திரும்பி வர ஆறுமாதங்கள் ஆகும் என்றும் சொன்னார். “நான் என்னண்ணே செய்யணும்?” “நான் வர்ற வரை யானையைப் பாத்துக்கணும். உன்னால முடியும். அதுக்கான கூறு உன் கண்ல இருக்கு.
அதேமாரி உன்னோட கால் பாதம் பரப்பிக்கிட்டு இருக்குல்ல... அதான் யானைக்குத் தோது. நா அத எப்பயோ கண்டுபிடிச்சுட்டேன். நா வந்தபிறகும் நீ பாகனா இருக்கணும்னா இருக்கலாம். சரியா..? பழகிக்கறியா..? ரெண்டு மாசத்துல நல்லா செட்டாயிரும். காலைல கோயில்லேந்து கொண்டாந்து குளிப்பாட்டணும்.
பொறவு வீதி வலம். இங்கேந்து போயி நாலு ராஜவீதி சுத்திட்டு பஸ் ஸ்டாண்டு வழியா கோயிலுக்குப் போயிரணும். தெருவு பூரா குடுக்குற காச நீ வெச்சிக்க. அரிசி, கரும்பு, வெல்லமெல்லாம் தருவாக சில வீட்ல. அதெல்லாம் ஒனக்குதான். சரியா..?” “பயமா இருக்குண்ணே...” “அதெல்லாம் பயப்படாத.
நா இருக்கன்ல்ல...” என்று சொல்லி யானையின் காதருகில் போய் ஏதோ முணுமுணுத்தார். யானை ஒற்றைக் காலைத் தூக்கிக்கொண்டு மீதி மூன்று கால்களால் ஒருமாதிரி அசைவு காட்டி, காதுகளை விசிறிக் கொண்டு ஈரம் வடியும் தன் சிறு கண்களால் குணாவை குறுகுறுவென்று பார்த்தது. இரண்டே மாதங்களில் குணாவை ஏற்றுக் கொண்டது. வேலையை விட்டு நிற்கப் போவதாக மூக்கைய்யனிடம் சொல்லி வைத்திருந்தானே தவிர என்ன செய்யப் போகிறான் என்று சொல்லவில்லை.
தினமும் யானையுடனேயே கிடந்தான். கொஞ்ச நாட்கள் வீட்டுப் பக்கம் கூடப் போகவில்லை. யானைக்கான சங்கேத மொழியைப் பாகனிடமிருந்து கற்றிருந்தான். பயிற்சியின்போது தினமும் கோயிலிலிருந்து யானையுடன் சேர்ந்து நடந்து வருவான். அதன் மேலே கழுத்தின் அருகில் இருக்கும் பெரிய கப்பாணிக் கயிற்றுக்குள் இருபுறமும் கால்களை விட்டுக்கொண்டு பாகன் அமர்ந்திருப்பார்.
அவர் விடைபெற்ற ஒரு நன்னாளில் குணா யானையின் மீது அமர்ந்து தன் தெருவுக்குள் வந்தான். கையிலிருந்த அங்குசத்தை காற்றில் சுழற்றி பின்னங்கழுத்தில் வைத்து இரு கைகளையும் அங்குசம் மேல் லாவகமாகத் தொங்கவிட்டுக் கொண்டான். சிறுவர்கள் அவன் பின்னால் ஓடிவந்தார்கள்.
தெருப் பெண்கள் அவனை ஆச்சரியமாய் அண்ணாந்து பார்த்தார்கள். ஆற்றங்கரை அருகே உள்ள சிறு பிள்ளையார் கோயில் அருகே வந்தவுடன் அன்று ஏதோ விசேஷம் என்பதால் கோயிலில் நின்றிருந்த சிலர் யானையைப் பார்த்தவுடன் பணிவுடன் வணங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் மூக்கைய்யனும் பக்தியோடு நின்றுகொண்டிருந்தான். ⛔⛔⛔⛔
நன்றி குங்குமம்.🙏🙏🙏
Comments
Post a Comment