இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நினைவு நாள் - சிவசங்கர் எஸ்.எஸ் #Shared
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பொது 12 மாவிரன்கள் உயிரை விட்டனர். அதை பற்றி ஒரு சிறய கட்டுரையை திமுக MLA எஸ்.எஸ். சிவசங்கர் முகநூலில் எழுதிஉள்ளார் அதை நான் SHARE செய்யுது உள்ளேன் இங்கு.
அது 1964ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் முதல் வாரம். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, காருக்கு செல்கிறார்.
அப்போது ஒரு 25 வயது வாலிபன், முதல்வர் பக்தவச்சலம் காலில் விழுகிறான். "அய்யா முதல்வர் அவர்களே, வருகிற 26ம் தேதியிலிருந்து மத்திய அரசாங்கம் இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவித்து, தமிழை இரண்டாந்தர மொழியாக ஆக்கி அழிக்கப் போகிறது. தயவுசெய்து முதல்வராகிய நீங்கள் தலையிட்டு இந்தியை தடுத்து நிறுத்தி, தமிழைக் காப்பாற்றுங்கள். தமிழர் என்ற முறையில் தமிழைக் காப்பாற்றுங்கள்", என கெஞ்சினான் முதல்வரிடம்.
முதல்வர் பக்தவச்சலம் காவல்துறையினரைப் பார்த்து," இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார். இளைஞன் கைது செய்யப்பட்டான். 15 நாட்கள் சிறைக் காவல். சிறையில் அந்த இளைஞன் சிந்திக்கிறான். மத்திய அரசு இந்தியை ஆட்சி மொழி ஆக்கி, தமிழை இரண்டாந்தர மொழியாக்குவதை தடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.
சிறையிலிருந்து விடுதலையான இளைஞன் திருச்சிக்கு ரயில் ஏறுகிறான்.
ஜனவரி மாதம் 25ம் தேதி, விடியற்காலை 04.30 மணி. திருச்சி ரெயில் நிலைய வாசலுக்கு வந்து நிற்கிறான் அந்த இளைஞன்.
கையில் இருந்த மூன்று சட்டைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்துக் கொள்கிறான். பெட்ரோலை தன் மீது ஊற்றி 'தீ' வைத்துக் கொள்கிறான். தன்னை யாரும் அணுகி தடுத்திடாதபடி தன்னை சுற்றிலும் வைத்திருந்த வேட்டியைப் போட்டுக் கொளுத்தி தீ அரண் ஏற்படுத்திக் கொள்கிறான்.
தீ உடல் முழுதும் நொடியில் பரவுகிறது. ஆனால் அந்த இளைஞனோ, "அன்னைத் தமிழ் வாழ்க, அன்னைத் தமிழ் வாழ்க, ... ஆதிக்க இந்தி ஒழிக, ஆதிக்க இந்தி ஒழிக", என்று கத்தியவாறே, கருகி கீழே விழுகிறான். மாண்டே போகிறான்.
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த அந்த இளைஞன் "கீழப்பழூர் சின்னசாமி". கீழப்பழூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஊர், அன்றைய திருச்சி மாவட்டம்.
பக்தவச்சலத்தால் பைத்தியம் என்றழைக்கப்பட்ட அந்த தீர இளைஞன் சின்னசாமி தான் உலக வரலாற்றில் முதல்முதலாக, தன் தாய்மொழியைக் காக்க தீக்குளித்து இன்னுயிர் ஈந்தவன்.
சின்னசாமி தீக்குளிக்கும் போது வயது 25 தான். உணர்ச்சி வேகத்தில் எடுத்த நடவடிக்கை அல்ல அது. திராவிடக் கொள்கையில் ஊறிப் போனவன் சின்னசாமி. தனது அருமை மகளுக்கு " திராவிடச் செல்வி" என்று பெயர் சூட்டும் அளவுக்கு கொள்கையாளன்.
தீக்குளிப்பதற்கு முன்பாக தன் மைத்துனருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தான். "தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகிறேன். என் மனைவி கமலத்தை காப்பாற்றுங்கள். என் மகள் திராவிடச்செல்வி பெரியவள் ஆனதும் அம்பிநாதனுக்கு திருமணம் செய்து வையுங்கள். என்னை மன்னித்து வாழ்த்தி வழி அனுப்பி வையுங்கள். தமிழ் வாழ வேண்டும் என்று நான் செய்த காரியம் வெல்லும் வெற்றி. இப்படிக்கு, சாகப் போகும் சின்னசாமி" என கடிதம் எழுதி மைத்துனருக்கு அனுப்பி விட்டு தீக்குளித்தான் சின்னசாமி.
திருச்சியில் உயிர் துறந்த சின்னசாமியின் உடல், திருச்சி உய்யகொண்டான் ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அங்கே நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
பின்னாளில் திராவிடச்செல்வி திருமணத்தை தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். தியாகி சின்னசாமி குடும்பத்திற்கு அந்த நாளில் ரூ 5,000/- நிதி வழங்கினார்.
அன்றைக்கு உயிர் துறக்கும் போது, தான் வரலாற்றில் இடம் பெறுவோம் என்று சின்னசாமி நினைத்திருக்க வாய்ப்பில்லை. தன் தாய் மொழி காக்கப்பட வேண்டும் என்பது மாத்திரமே அவரது குறிக்கோளாக இருந்திருக்கும்.
சின்னசாமிக்கு முன்பாக உயிரிழந்தவர்கள் நடராசனும், தாளமுத்துவும். 1938ல் இந்தி எதிர்ப்பு போரில் கைதான சென்னை நடராசனுக்கு, சிறையில் உடல் நலம் குன்றிப் போகிறது. அப்போதும் ராஜாஜி அரசாங்கம் அவரை விடுவிக்கவில்லை. கைதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துப் போனார்.
தாளமுத்துவும் இந்தி எதிர்ப்புப் போரில் கைதாகி சிறையில் இருந்த போது, உடல் நலிவுற்று இறந்துப் போனார். இவர் இரண்டாம் களப்பலி.
சின்னசாமிக்கு பிறகு, கோடம்பாக்கம் சிவலிங்கம். கழகத்தில் நுங்கம்பாக்கம் பகுதிப் பொருளாளராகப் பணியாற்றியவர் தீக்குளித்து இந்தியை எதிர்த்து உயிர் துறந்தார்.
அடுத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன். கழகத்தின் தொண்டர். அவரும் தீக்குளித்து இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போரில் குதித்தனர். ஊர்வலம் சென்றனர். கூட்டத்தைக் கலைக்க, தடியடியில் துவங்கியக் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. மாணவன் இராசேந்திரன் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. களப்பலியானார்.
அடுத்து புதுக்கோட்டை - கீரனூர் முத்து. 22 வயதில் நஞ்சை அருந்தி "இந்தி ஒழிக" என்று முழக்கமிட்டு உயிரை தியாகம் செய்தான்.
சத்தியமங்கலம் முத்து 1965ல் தீவைத்துக் கொண்டு, இந்தியை எதிர்த்து கோஷமிட்டு மாண்டான்.
அய்யம்பாளையம் வீரப்பன், இருபத்து ஏழு வயது இளைஞன். பள்ளி தலைமை ஆசிரியர். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, முதல்வர் பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோருக்கு கடிதம் எழுதி அனுப்பி விட்டு, நாட் குறிபேட்டில் "நான் ஒரு மொழிப்போர் தியாகி" என எழுதி, கையெழுத்திட்டு வைத்து விட்டு, தீக்குளித்து இறந்து போனார்.
விராலிமலை சண்முகம், பேரறிஞர் அண்ணாவுக்கு," இந்தி எதிர்ப்பு போரை கைவிட்டு விடாதீர்கள்" என கடிதம் எழுதி விட்டு, விஷம் குடித்து மாண்டுப் போனான்.
கோவை, பீளமேடு பொறியியல் கல்லூரி மாணவன் தண்டபாணி. "தமிழ் வாழ்க, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என்று எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து மாண்டுப் போனான்.
மாயவரம் கல்லூரி மாணவன் சாரங்கபாணி, கல்லூரி வகுப்பறையிலேயே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டான். "தமிழ் தாய்க்கு என் உயிரைத் தந்து விட்டேன்", என்று மரண வாக்குமூலம் தந்து உயிரிழந்தான்.
இப்படி எண்ணற்ற தமிழர்கள் உயிர் தியாகம் செய்து காத்த மொழி, நம் தமிழ் மொழி.
மொழி காக்கும் போரில் இன்னுயிர் ஈந்தவர்கள் நினைவாகவே, மொழிப்போர் தியாகிகளைப் போற்றி 'வீரவணக்க நாள்' பொதுக் கூட்டங்கள் ஜனவரி 25 ஆம் தேதி, தமிழகம் முழுதும் தி.மு.க சார்பாக நடத்தப்படுகிறது.
மொழி காக்கும் போரின் தேவையை இன்றும் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது.
ஆனால் கடந்தகாலத்தில் தமிழகம் மாத்திரமே போராடிய நிலை போல இல்லாமல், இப்போது கர்நாடகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களும் 'இந்தி திணிப்பிற்கு' எதிராக அணி திரளும் நிலை வந்திருக்கிறது.
# இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் !
**********************************
Comments
Post a Comment